Monday, January 5, 2009

கிளிநொச்சி இலங்கை வசம்! கருணாநிதி காங்கிரசார் வசம்!

சில ஆயிரம் சதுர கிலோமீட்டரைப் பிடிக்க இலங்கை ராணுவத்திற்குப் பின்னால் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா என ஏழு நாட்டு ராணுவத் தளபதிகள் இருந்தார்கள். தென்கிழக்கின் வலிமையான பல அடியாட்கள் இலங்கை ராணுவத்துக்கு துணை நின்றார்கள். அப்படியும் பேரிழப்புகளோடுதான் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டிருக்கிறது; இல்லை புலிகள் கிளிநொச்சியை முன்நோக்கி நகர்த்தி வைத்திருக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இதில் தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தமிழகத்துக்குத்தான். ஏனென்றல் ஆறரை கோடி தமிழ் மக்களும் ஈழத்தின் மீதான இலங்கை அரசின் போரை நிறுத்தக் கோரினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியும் பல விதமான கவிதைகள், உணர்ச்சிக் கதையாடல்கள் மூலம் மத்திய அரசிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் கருணாநிதியின் எல்லாக் கோரிக்கைகளையும் தூக்கி குப்பையில் வீசி எறிந்து விட்டு இலங்கைக்கு ராணுவ ரீதியாக தான் செய்யும் உதவிகளுக்கு கருணாநிதியிடம் ஒப்புதலும் வாங்கிச் சென்று விட்டது இந்திய மத்திய அரசு.
ஒரு கட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூட குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அதே சமயம் என் வாழ்நாளில் ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லையே என்ற புலம்பல் வார்த்தைகளை வேறு உதிர்த்தார். கடைசியில் டில்லிக்குப் போய் பிரணாப் முகர்ஜியையாவது இலங்கைக்கு அனுப்புங்கள் என்ற கோரிக்கையை வைத்து விட்டு அமைதி காத்தார். வழக்கம்போல மத்திய அரசு அதையும் குப்பையில் வீச திமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி பிரணாப்முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தோடு திமுகவும் அதன் தலைவரும் முடங்கிப் போனார்கள். ஒரு பக்கம் பதவி ஆசை. இன்னொரு பக்கம் காங்கிரஸை சமாளிப்பதற்கான புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் என இரண்டு பக்கமும் நாடகமாடி எந்த மேடையிலும் சோபிக்காமல் வசனமும் எடுபடாமல் இன்று புலம்பித்திரிவதைத் தவிர இந்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருக்கு வேறு வழியில்லை.
இவரைப் போன்ற ஒரு பெரும் நாடகக்காரர்தான் டாக்டர் ராமதாசும். மத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டு ஈழ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்காமல் பழியை எல்லாம் திமுக மீது சுமத்தி விட்டு தந்திரமாக நடந்து கொள்கிற ராமதாசும் கருணாநிதியும் ஒரே மேடையில் இணைந்து நடித்தால் நாடகம் சுவராஸ்யம் கூடக் கூடும். இன்று கிளிநொச்சி ராணுவத்தினர் வசமாக இவர்களின் பதவி ஆசையும் கொள்கை வீழ்ச்சியுமே காரணம். இவர்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று நிச்சயமாக சொல்ல முடியும்; அல்லது மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை ராணுவ ரீதியாக பலமிழந்தாவது போயிருக்கும்.
2002-ல் புலிகளின் முற்றுகைக்குள் ஆனையிறவில் பல்லாயிரம் சிங்களத் துருப்புகள் சிக்கிக் கொண்டபோது இந்தியா தலையிட்டுதான் இலங்கை ராணுவத்தினரைக் காப்பாற்றியது. அது போல இன்று பாசிச இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்துகிற போரை நிறுத்தச் சொல்லுகிற இந்தியா ஒப்புக்குக் கூட இலங்கையில் போரை நிறுத்த சொல்லவில்லை. மாறாக அது மீண்டும் மீண்டும் சொன்னது, 'அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது' என்று. அதே சமயம் தனது ராணுவத் தளபதிகளை இலங்கை கள முனைக்கு அனுப்பி, கிளிநொச்சிப் போரை வழி நடத்தியது. மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என்று சொன்ன கருணாநிதியும் நிவாரணப் பொருட்களில் அக்கறை காட்டும் மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ராமதாசும் இந்திய அரசின் இலங்கை மீதான ஆர்வத்தை மறைமுகமாக ஆதரித்து நின்றார்கள் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. வன்னி மீதான படையெடுப்பில் அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்கிற மகிந்தாவின் வார்த்தைகளை கருணாநிதி நம்பித் தொலைக்கிறாரோ என்னவோ?
ஈழம் பற்றி தமிழகத்தில் பேசுவதை எல்லாம் புலிகள் பற்றிய பேச்சாக மாற்றுவதன் மூலம் கருணாநிதியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. காங்கிரசாரை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்கிற கருணாநிதி இந்தச் சீரழிவுகளுக்கு இறுதியில் வந்து சேர்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு பக்கம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிக் கொல்கிற காட்சிகள் நம் தூக்கத்தைக் குலைக்கிற அதே வேளையில் போரில் இறந்த பெண் புலிகளின் உடலை பாலியல் ரீதியில் வன்முறை செய்கிறதைப் பற்றி என்ன சொல்ல? உயிரற்ற உடலைக் கூட வெறி கொண்டு நோக்கும் போது நாம் அந்த பெண்ணுடல்களின் பால் மீறப்பட்ட பாலியல் உரிமை குறித்து மௌனம் சாதிக்கத்தான் வேண்டுமா? அவர்களை புலிகளாகப் பார்ப்பதா ஈழத் தமிழ் பெண்களாகப் பார்ப்பதா? என்கிற கேள்விகளை எல்லாம் கருணாநிதியிடம் அல்ல சோனியா காந்தியிடமும் ப்ரியங்காவிடமுமே நாம் கேட்க வேண்டும். மற்றபடி கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு பெருங்கவலைகள் கொள்ள ஏதும் இல்லை. போரில் இவ்விதமான நடவடிக்கைகளை, இழப்புகளை, துரோகங்களை புலிகள் முன்னரும் சந்தித்திருக்கிறார்கள்.
கடைசியாய் ஒரு சிறு குறிப்பு
கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் ராஜிநாமா நாடகங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவர்களும் மத்திய அரசும் சேர்ந்து ஈழ விவகாரத்தில் துரோக நாடகங்களைத் தொடருவார்களோ என்று தோன்றுகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியை இலங்கைக்குப் போகச் சொல்லிக் கேட்டது, அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி இழுத்தடித்தது, கிளிநொச்சி இலங்கை ராணுவத்தின் வசம் விழுந்த அன்று ராமதாஸ் இந்திய பிரதமருக்கு பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியது என இதெல்லாம் இவர்கள் கூட்டு சேர்ந்தே செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இனி பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போவார். இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று சொல்வார். இலங்கையும் போரை நிறுத்தி விட்டதாக அறிவிக்கும். நாடகங்கள் வழமைபோல தொடர்ந்து கொண்டிருக்கும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக திரண்ட தமிழகத்தின் எழுச்சியை இவர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீர் விட்டு அணைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் தணல் தண்ணீராலோ கண்ணீர்த் துளிகளாலோ அணையக் கூடியதல்ல.அது சாம்பல் மூடிய நெருப்பு, என்றாவாது எரிந்தே தீரும்...

2 comments:

Anonymous said...

Good work. Keep writing.

JohnPonraj said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி.
KARTHIK